search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளச்சல் மவுன ஊர்வலம்"

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து குளச்சல் பகுதியில் பொதுமக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.
    குளச்சல்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் மவுன ஊர்வலங்கள், பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று காலை ராஜாக்கமங்கலம் துறை பொதுமக்கள் அங்குள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திரண்டு சிறப்பு திருப்பலி நடத்தினர். பின்னர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

    இதேபோல மாலையில் குளச்சல் பகுதி பொதுமக்கள் சார்பில் அங்கு மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயம் முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டனர். அவர்கள் கைகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர். 

    ஆலயம் முன்பு தொடங்கிய ஊர்வலம் பீச் சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு வழியாக மரமடி சந்திப்பில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது சாரல் மழை பெய்தது. பொதுமக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் குளச்சல் பங்குத்தந்தை எட்வின், பங்கு நிர்வாக செயலாளர் வால்டர், துணை செயலாளர் விஜயன், பொருளாளர் மரிய ரூபன், களிமார் புனித சூசையப்பர் ஆலய துணைத் தலைவர் ஜான் கிறிஸ்டோபர், அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், விசைப்படகு சங்கம், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள், பொது நல அமைப்பு, நகர வியாபாரிகள் சங்கத்தினர், வேன், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், குளச்சல் முஸ்லீம் முகல்ல செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் அமீர் அலி, செயற்குழு உறுப்பினர் சாதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் நசீம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×